புதுச்சேரியை ஆரோக்கிய நகரமாக்க – Puducherry Towards Healthy City

புதுச்சேரியை ஆரோக்கிய நகரமாக்க

Puducherry Towards Healthy City

தீர்மானம்

24, ஜனவரி 2026 அன்று ஜெயராம் உணவகத்தில், புதுச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் மக்கள் நல வாழ்வு இயக்கம் இணைந்து நடத்திய மாநாட்டில் முன்மொழிந்த தீர்மானம் பின்னணி

உலகளவில் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நகரங்கள் வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி, சமூக பாதுகாப்பு போன்ற சிறந்த சேவைகளை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியத்திற்கும் மனித வளர்ச்சிக்கும் வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

அதே சமயத்தில் நகரங்களில் தனிப்பட்ட சுகாதார ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் உருவாகின்றன.

நகர்ப்புற குடிசைப்பகுதிகள் மற்றும் சிறிய, அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் வறுமை மற்றும் புறக்கணிப்பு அதிகமாக உள்ளது. இவை மோசமான வீட்டு வசதி, கூட்ட நெரிசல், பாதுகாப்பற்ற குடிநீர், சுகாதார வசதிகள் இல்லாமை மற்றும் காற்று மாசுபாடு போன்ற பிரச்சினைகளோடு இணைந்து காணப்படுகின்றன. இவை காசநோய் போன்ற தொற்றுநோய்கள் பரவுவதற்கு காரணமாகின்றன.

அதேபோல், நகரங்களின் ஆரோக்கியமற்ற சமூக, கட்டமைப்பு மற்றும் சரியான உணவு இல்லாத காரணத்தால் தொற்றா நோய்கள் (NCDs), வன்முறை மற்றும் மனநோய்களின் அளவும் அதிகமாக உள்ளது.

இந்தச் சூழலை கருத்தில் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு திட்டத்தை ஏற்றுக்கொண்டது. அதன் இலக்கு, மக்கள் வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொண்டு தங்களின் முழுத் திறனை வளர்த்துக்கொள்ள, ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க உதவும் வகையில் உடல்நலம் மற்றும் சமூக சூழல்களை தொடர்ந்து மேம்படுத்துதல்.

இந்தத் திட்டத்தின் கீழ், நோய்களின் சமூக காரணிகளையும் சுகாதார சமத்துவமின்மையையும் கையாளும் செயல்முறைகளை நகரங்களில் உருவாக்க ஊக்குவிக்கப்படுகின்றன.

அவற்றை சிறப்பாக செயல்படுத்தும் நகரங்களுக்கு ‘ஆரோக்கிய நகரம்’ சான்றிதழ் வழங்கப்படுகிறது. புதுச்சேரி வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா நகரம் மற்றும் ஸ்மார்ட் நகரம் ஆகும்.

இந்தத் தீர்மானத்தின் மூலம், புதுச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் மக்கள் நல வாழ்வு இயக்கம் இணைந்து புதுச்சேரியை ஒரு ஆரோக்கிய நகரமாக மாற்ற அரசாங்கமும் பொதுமக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றன.

இந்தப் பணிகள் மேயர் மற்றும் நகராட்சி ஆணையர் தலைமையிலான நகராட்சிகள் மூலம், பொது சுகாதார நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் அரசின் அனைத்து தொடர்புடைய துறைகளின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

புதுச்சேரி – சுகாதார நிலை - Health Context

புதுச்சேரி சமீபத்தில் உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட மாநிலமாகவும் உள்ளது.

சுகாதாரத் துறையில், பச்சிளம் குழந்தை இறப்பு சதவிகிதம் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இறப்பு சதவிகிதம் குறைப்பதில் முன்னேற்றம் இருந்தாலும், தொற்றாத நோய்கள், மனநோய்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்றவற்றால் பெரும் சவால்களை எதிர்கொள்கிறது.

மேலும், பல தொற்றுநோய் பரவல்களும் உள்ளன.

ஆண்களில் 30%க்கும், பெண்களில் 23%க்கும் உயர் இரத்த அழுத்தம் உள்ளது.

15 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 20%க்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு நோய் உள்ளது.

ஒரு லட்சம் மக்களுக்கு தற்கொலை விகிதம் உலகில் நான்காவது இடத்திலும்,

சாலை விபத்து மரணங்கள் 26.3 சதவிகிதமும்

உடல் பருமன் (Obesity) 40 சதவிகிதத்திற்கு மேலும் உள்ளது.

ஆண்களில் 27%க்கும் மேற்பட்டோருக்கு மது பழக்கம்,

பெண்களில் 55%க்கும் மேற்பட்டோருக்கு இரத்தசோகை, குடும்ப வன்முறை சுமார் 30 சதவிகிதமும்,

அதே சமயம் குழந்தைகளில் 20 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் வளர்ச்சி தடை

(stunting) கொண்டவர்களாக இருக்கின்றனர்.

மக்கள் தொகை வேகமாக முதிர்ந்து வருகிறது. ஆனால் முதியோர் பராமரிப்பிற்கான திட்டங்கள் இல்லை.

சுகாதார சேவைகள் ஒப்பீட்டளவில் நன்றாக உள்ளது. புதுச்சேரியில் 3 அரசு மற்றும் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் (சுமார் 2000 இடங்கள்), 3 அரசு மற்றும் 11 நர்சிங் கல்லூரிகள் (ஆண்டுக்கு 930க்கும் மேற்பட்ட நர்சுகள்), 20க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளன.

ஆனால், சிகிச்சைச் செலவுகள் மிக அதிகம். 90%க்கும் மேற்பட்டோர் கையில் இருந்து அதிகமாக செலவுகளை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றனர். பலர் சுகாதாரச் செலவுகளால் வறுமைக்குள் தள்ளப்படுகின்றனர்.

முதன்மை சுகாதாரத்தில் 39 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 77 துணை மையங்கள் (HWC), 4 சமூக சுகாதார மையங்கள் உள்ளன. இருப்பினும், சேவைகள் குறுகிய அளவிலேயே கிடைக்கின்றன. பெரும்பாலான தேவைகளுக்காக மக்கள் மருத்துவமனைகளையே நாட வேண்டியுள்ளது.

புதுச்சேரியின் மோசமான சுகாதார நிலை பெரும்பாலும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் உருவாகியுள்ளது. திறந்த வடிகால்கள், கழிவுநீர் மேலாண்மை இல்லாமை, பாதுகாப்பற்ற குடிநீர் காரணமாக காலரா போன்ற நோய்கள், கொசு தொல்லை, மோசமான சாலை பாதுகாப்பு, போதைப்பொருள் பயன்பாடு அதிகம்.

காலநிலை மாற்றத்தால் அடிக்கடி வெள்ளம், காற்று மற்றும் ஒலி மாசுபாடு, கடற்கரைப் பகுதிகளின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

புதுச்சேரி ‘ஆரோக்கிய நகர’ அணுகுமுறையின் இலக்குகள்

a) பாதுகாப்பான குடிநீர், உணவு பாதுகாப்பு – நீர்மூலம் மற்றும் உணவுமூலம் பரவும் நோய்களை ஒழித்தல்

b) சேகரிக்கும் இடத்திலேயே கழிவுகளை பிரித்தல், திடக்கழிவு மற்றும் கழிவுநீர் மேலாண்மை

c) ஏழைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவருக்கும் நடைபாதை மற்றும் விளையாட்டு/ஓய்வு இடங்கள்

d) சாலை பாதுகாப்பு உறுதி

e) ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கிய உணவுகள், ஆரோக்கியமற்ற உணவுகளை கட்டுப்படுத்துதல்

f) அனைவருக்கும் தரமான, குறைந்த செலவில் வீட்டு வசதி

g) காற்றுத் தரம் மற்றும் ஒலி மாசுபாடு பாதுகாப்பான அளவில் இருப்பது

h) தனிப்பட்ட பாதுகாப்பு – பெண்கள் மற்றும் பாலின சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை குறைத்தல்

i) வெள்ளம், புயல், சுனாமி ஆகியவற்றிற்கு எதிரான பாதுகாப்பு

j) முழுமையான சுகாதார சேவைகளுக்கான பொதுவான அணுகுமுறை

k) சுகாதாரச் செலவுகளால் ஏற்படும் நிதிச்சுமை குறைப்பு

l) அனைவருக்கும் சமூக பாதுகாப்பு ESI போன்ற அமைப்பு

செயல்படுத்த வேண்டிய படிகள் :

மேலுள்ள அனைத்து அளவுகோள்களுக்கும் அடிப்படை தரவுகளுடன் நகர சுகாதார சுயவிவரம் உருவாக்குதல்.

WHO-வின் Healthy City Programme-இல் இணைவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

நகரம் முழுவதும் சுகாதார விழிப்புணர்வு – தனிநபர் பழக்கங்களைத் தாண்டி சமூக, பொருளாதார சூழல் ஆரோக்கியத்தை உருவாக்கும் என்பதை வலியுறுத்துதல்.

புதுச்சேரி பொது சுகாதாரச் சட்டங்களை ஆய்வு செய்து, இலவச/மானிய சுகாதார சேவையை அடிப்படை உரிமையாக உறுதி செய்தல்.

நகர சுகாதார வளர்ச்சி திட்டம் – நகர நிர்வாகத்தின் முக்கிய மதிப்பாக ஆரோக்கியம் இருப்பதை வெளிப்படுத்துதல்.

துறைகள் இடையிலான ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்த இலக்குகள் மற்றும் பொறுப்புகள் சமூக பங்கேற்பு – நகரமைப்பு, வீட்டு வசதி, போக்குவரத்து, சுகாதாரம் தொடர்பான குடிமக்கள் நல சங்கங்கள் இணைந்து மேற்கண்ட அடிப்படைகளின் பேரில் புதுச்சேரியை ‘ஆரோக்கிய நகரம்’ என அறிவிக்கும் திட்டத்தை அரசும் குடிமக்கள் அமைப்புகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி அறிவியல் இயக்கமும் புதுச்சேரி மக்கள் நல வாழ்வு இயக்கமும் அழைப்பு விடுக்கின்றன.

மேற்கோள்கள் :

Healthy Cities – உலக சுகாதார நிறுவனம்

How to Develop and Sustain Healthy Cities in 20 Steps – WHO, கோபன்ஹேகன்

0
0
Would love your thoughts, please comment.x
()
x