பொருளடக்கம்
நாம் இந்த மாதத்தின் இறுதியை நெருங்கிக் கொண்டிருப்பதால், ஜூன் மாதத்தின் சில வானியல் நிகழ்வுகளின் தொடக்கத்தை நாம் தவறவிட்டிருக்கலாம். ஆனால் வானியலில், அறிவு ஒருபோதும் காலாவதியாவதில்லை. இங்கே நாம் நிகழ்வுகளைப் பட்டியலிட்டது மட்டுமின்றி, அவற்றின் பின்னணியில் உள்ள அறிவியலையும் விவாதித்துள்ளோம். பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பதையும், இந்த நிகழ்வுகள் ஏன் நிகழ்கின்றன என்பதையும் புரிந்துகொள்வது மிகவும் சுவாரஸ்யமானது. மேலும், இந்த நிகழ்வுகளில் பலவற்றைத் தொடர்ந்து பல நாட்களுக்கு ரசிக்க முடியும் என்பதால், நீங்கள் வெளியே சென்று வானத்தை உற்றுநோக்க நிறைய நேரம் கிடைக்கும். எனவே, இந்த மாதத்தின் மிகச்சிறிய நிலவைக் காணத் தவறாதீர்கள், அத்துடன் பிரபஞ்சத்தை ஒன்றாக ஆராயவும், படிக்கவும், சிந்திக்கவும் எங்களுடன் இணையுங்கள்!
வியாழன் - வெள்ளி இணைவு
இந்த மாதத்தின் வானியல் சிறப்பம்சங்களைத் தொடங்கி வைப்பது, நமது இரவு வானில் உள்ள மிக பிரகாசமான இரண்டு கோள்கள் ஒன்றோடொன்று நெருங்கி வருவதாகும். இது பெரும்பாலும் ‘பிரபஞ்ச முத்தம்’ (உண்மையில் அப்படி இல்லை என்றாலும்) என்று அழைக்கப்படுகிறது. வெள்ளியும் வியாழனும் பல வாரங்களாக இரவு வானில் ஒன்றோடொன்று நெருங்கி வருவது போல் தோன்றும். இது அவற்றின் மிக நெருக்கமான சந்திப்பு, ஜூன் 9 ஆம் தேதி வரை தொடரும்.
சூரியன் மறைந்த சிறிது நேரத்திலேயே, மேற்கு தொடுவானத்திற்கு சற்று மேலே பாருங்கள், அப்போது இந்த பிரகாசமான ஜோடியை நீங்கள் காண முடியும். சூரியன் மறைந்த உடனேயே அவையும் மறைந்து விடுவதால், அவற்றை நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே காண முடியும். இந்த நாளில், இரவு வானில் வெள்ளியும் வியாழனும் வெறும் 1.6 டிகிரி இடைவெளியில் பிரிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றும், மேலும் அவை இருவிழி நோக்கியின் ஒரே பார்வைப்புலத்தில் எளிதாக அடங்கிவிடும். இந்த இணைவிற்கு முன்பும் பின்பும் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் அவற்றின் பாதையை நீங்கள் கண்காணிக்கலாம், அதன்மூலம் அவற்றின் மாறும் நிலைகளை நீங்கள் கவனிக்க முடியும்.
இந்த நிகழ்வின் போது அவை உண்மையில் ஒன்றோடொன்று நெருக்கமாக உள்ளனவா? இல்லை. பூமியிலிருந்து பார்க்கும் நமக்கு அவை நெருக்கமாக இருப்பது போல மட்டுமே "தோன்றுகின்றன". ஆனால் உண்மையில் அவை பல நூறு மில்லியன் கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ளன. இந்த இரண்டு கோள்கள் மற்றும் நமது பூமியின் சுற்றுப்பாதை இயக்கங்கள்தான் இந்த கண்கவர் காட்சியை உருவாக்குகின்றன.
மேலும், வியாழன் கோளானது விரைவில் இரவு வானில் நமது பார்வையிலிருந்து மறைந்துவிடும். ஜூன் மாத நடுப்பகுதி முதல் காலையில் மட்டுமே தோன்றும். அப்போது நமது பிரகாசமான சூரியன் இருப்பதினால் வியாழனைக் காண்பது கடினமாகிவிடும். எனவே, இந்த வாயு பெருங்கோளை, சூரியனின் பிரகாசத்தில் மறைவதற்கு முன்பு, காண்பதற்கான கடைசிச் சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாக இந்த இணைவு அமைகிறது.
சூப்பர் முழு நிலவு
பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? நிலவின் சுற்றுப்பாதை ஒரு துல்லியமான வட்டமாக அமைந்திருந்தால் இந்தத் தூரம் ஒரே மாதிரியாக இருந்திருக்கும். ஆனால், இது சற்றே நீள்வட்டமாக உள்ளது, அதாவது, சில நேரங்களில் நிலவு பூமிக்கு சற்று நெருக்கமாகவும் (இது ‘அண்மைநிலை’ என்று அழைக்கப்படுகிறது) மற்றும் சில நேரங்களில் சற்று தொலைவிலும் (இது ‘சேய்மைநிலை’ என்று அழைக்கப்படுகிறது) இருக்கும்.
இதன் விளைவாக, நிலவின் உண்மையான அளவு ஒருபோதும் மாறாது என்றாலும், அதன் அண்மைநிலையின் போது வானில் சற்று பெரிதாகவும், சேய்மைநிலையின் போது சற்று சிறிதாகவும் தோன்றும். பூமிக்கும் நிலவுக்கும் இடையே மாறிக்கொண்டிருக்கும் தூரமே, தோற்ற அளவில் ஏற்படும் இந்த வேறுபாட்டிற்க்குக் காரணமாகும்.
பூமியைச் சுற்றி வரும் ஒவ்வொரு 27-நாள் சுற்றுப்பாதையின் போதும், நிலவு அண்மைநிலை மற்றும் சேய்மைநிலை ஆகிய இரண்டு நிலைகளையும் கடந்து செல்கிறது. இதற்கிடையில், சுமார் 29.5 நாட்கள் கொண்ட ஒரு சுழற்சியில், நிலவு புது நிலவிலிருந்து முழு நிலவிற்கும், பின்னர் மீண்டும் பழைய நிலைக்கும் மாறுகிறது. ஒரு புது நிலவானது அண்மைநிலையின் போது (அதாவது நிலவு பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது), பொதுவாக சூப்பர் முழு நிலவு (Super-New-Moon) என்று அழைக்கப்படுகிறது (இருப்பினும், இது ஒரு அதிகாரப்பூர்வ வானியல் சொல் அல்ல).
இந்த மாதம் ஜூன் 15 அன்று இதை நீங்கள் இரவு வானில் காண முடியும். அப்போது சூப்பர் முழு நிலவு (Super-New-Moon) வெறும் கண்ணுக்குத் முழுமையாகத் தெரியாது. நிலவு ஒளிரும் பக்கம் நம்மிடமிருந்து முற்றிலும் விலகியிருக்கும் கோணத்தில் இருப்பதே இதற்குக் காரணம். நிலவு வழக்கத்தை விட பூமிக்கு மிக அருகில் இருப்பதால், அதன் ஈர்ப்பு விசை வலுவாக இருக்கும், இது உயர் மற்றும் தாழ்வான அலைகளின் வரம்பில் சிறிது அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இது 'அண்மைநிலை உயர் ஓதங்கள் (perigean spring tides)' என்று அழைக்கப்படுகிறது.
கோள்களின் அணிவகுப்பு
இரவு வானில் வெள்ளியும் வியாழனும் ஒன்றோடொன்று நெருக்கமாகப் பிரகாசிப்பதை நாம் முன்பு பார்த்தோம். இப்போது, மூன்றாவது கோள் ஒன்று இந்தக் அண்டவெளி வேடிக்கையில் இணையப் போகிறது. "விரைவுக் கோள்" என்று அழைக்கப்படும் புதன், இரவு வானில் ஒரு கண்கவர் வரிசையை உருவாக்க வெள்ளி மற்றும் வியாழனுடன் அணிவகுக்கத் தயாராக உள்ளது. இதை மேலும் உற்சாகப்படுத்துவது என்னவென்றால், பிறை நிலவும் இம்மூவருடன் இணைந்து இந்த அணிவகுப்பை நீட்டிக்கும்.
சூரியன் மறைந்த பிறகு, மேற்கு நோக்கிப் பார்ப்பதன் மூலம், சுமார் ஜூன் 12 முதல் ஜூன் 18 வரை இந்த அழகிய காட்சியை நீங்கள் காண முடியும். இந்த நாட்களில் நிலவு மற்ற மூன்று கோள்களுடன் படிப்படியாக ஒரே நேர்கோட்டில் அமைவதையும் நீங்கள் கண்காணிக்கலாம். புதன் தொடுவானத்தை நோக்கி சற்று தாழ்வாக அமைந்திருக்கும் என்பதால், அந்தி வேளையின் வெளிச்சத்தில் அதைக் காண மேற்குத் திசையில் உங்களுக்கு தெளிவான மற்றும் தடையற்ற பார்வை தேவைப்படும்.
அதிகாரப்பூர்வ வானியல் சொற்களில் நாம் 'கோள்களின் அணிவகுப்பு (planet parade)' என்ற வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டாலும், இரவு வானில் பல கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரிசையாக அமையும் போது மக்கள் பொதுவாக இதனைக் குறிப்பிடுகிறார்கள். நாம் அவற்றை ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பதாகக் கூறினாலும், பூமியிலிருந்து பார்க்கும் போது மட்டுமே அது அவ்வாறு தோன்றுகிறது. சூரிய குடும்பம் முழுவதும் அவை மிகப்பெரிய தூரத்தால், பெரும்பாலும் நூற்றுக்கணக்கான மில்லியன் அல்லது பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பிரிக்கப்பட்டுள்ளன.
ஜூன் கதிர்த்திருப்பம்
உங்களுக்கு எப்போதாவது ஒரு நாள் மிகவும் நீளமாகவோ அல்லது வழக்கத்திற்கு மாறாக மிகச் சுருக்கமாகவோ இருந்ததைப் போலத் தோன்றியிருக்கிறதா? உண்மையில், அவை அப்படி இருந்திருக்கலாம். பூமியின் அச்சு 23.5 டிகிரி சாய்ந்திருப்பதன் காரணமாக, நமது பகல் மற்றும் இரவுகளின் நீளம் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பூமி சூரியனைச் சுற்றி வருவதால், வானத்தில் சூரியனின் பாதை மற்றும் தொடுவானத்தில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் நிகழும் இடங்கள் ஆகிய அனைத்தும் படிப்படியாக மாறுகின்றன.
நமது வானில் சூரியன் கடந்து செல்லும் தோற்றப் பாதையின் இரண்டு உச்சப்புள்ளிகளில் ஒன்றை கதிர்த்திருப்பம் (solstice) என குறிப்பிடுகிறோம். கதிர்த்திருப்பங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை நிகழ்கின்றன, ஒன்று ஜூன் மாதத்திலும் (இந்த ஆண்டு 21 ஆம் தேதி) மற்றொன்று டிசம்பர் மாதத்திலும் (இந்த ஆண்டு 21 ஆம் தேதி) நிகழும். ஜூன் கதிர்த்திருப்பத்தின் போது, பூமியின் பூமத்திய ரேகையைப் (equator) பொறுத்து சூரியன் அதன் வடக்கே மிகத் தொலைவில் உள்ள நிலையை அடைகிறது. அதேசமயம் டிசம்பர் கதிர்த்திருப்பத்தின் போது, அது தெற்கே மிகத் தொலைவில் உள்ள நிலையை அடைகிறது.

ஜூன் கதிர்த்திருப்பத்தின் போது, வடக்கு அரைக்கோளம் அதிகபட்சமாக 23.5 டிகிரி கோணத்தில் சூரியனை நோக்கி மிகவும் சாய்ந்திருக்கும். இதற்கு நேர்மாறாக, தெற்கு அரைக்கோளம் அதே அளவிலான கோணத்தில் சூரியனை விட்டு மிகவும் விலகிச் சாய்ந்திருக்கும். வடக்கு அரைக்கோளத்தில் உள்ள நாம், ஆண்டின் மிகக் குறுகிய இரவையும் மிக நீண்ட பகலையும் அனுபவிப்போம். தெற்கு அரைக்கோளத்தில் உள்ளவர்களுக்கு, இது மிக நீண்ட இரவாகவும் மிகக் குறுகிய பகலாகவும் அமையும்.
இதற்குப் பிறகு, நமது வானில் சூரியன் மீண்டும் தெற்கு நோக்கி நகரத் தொடங்கும். சூரியனின் நிலையில் ஏற்படும் இத்தகைய தோற்ற மாற்றங்கள், இந்தியாவின் சில பகுதிகளில் காணப்படும் ‘நிழலில்லா நாள்’ (Zero Shadow Day) என்ற சுவாரஸ்யமான நிகழ்வுடனும் தொடர்புடையது. ஆனால் இது ஏன் இந்தியாவின் கீழ்ப்பாதியில் மட்டுமே நிகழ்கிறது? மேலும் சூரியனின் மாறும் நிலைக்கும் இதற்கும் என்ன தொடர்பு? ஆராய்ந்து கண்டுபிடியுங்கள்!
ஸ்ட்ராபெரி சிறுநிலவு
நிலவிற்கு அண்மைநிலை மற்றும் சேய்மைநிலை ஆகிய இரண்டு நிலைகள் இருப்பதையும், 27 நாள் சுழற்சியில் அது இந்த இரண்டையும் இருமுறை அடைகிறது என்பதையும் நாம் முன்பு பார்த்தோம். சூப்பர் முழு நிலவு அண்மைநிலைக்கு அருகில் நிகழ்ந்த நிலையில், இந்த நிகழ்வு அதன் மிகத் தொலைதூரப் புள்ளியான சேய்மைநிலையில் நிகழ்கிறது.
நிலவு ஜூன் 28 அன்று சேய்மைநிலையை அடைகிறது. மேலும் இது ஜூன் 29 அன்று தோன்றும் முழு நிலவு மிக நெருக்கமாக ஒத்துப்போகிறது. இது 'சூப்பர்-நிலவுக்கு' நேர்மாறானதாகும், இது 'சிறுநிலவு' (Micromoon) என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது இரவு வானில் வழக்கத்தை விடச் சிறியதாகவும் மங்கலாகவும் தோன்றும். சூரியனுக்கு ஏறக்குறைய எதிர்ப்புறமாக நிலவு அமைந்திருக்கும் போது முழு நிலவு நிகழ்கிறது.
'ஸ்ட்ராபெரி நிலவு' என்ற சொல், நிலவு ஸ்ட்ராபெரியைப் போல சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றும் என்பதைக் குறிக்கவில்லை. மாறாக, இது ஜூன் மாதத்தில் நடைபெறும் காட்டு ஸ்ட்ராபெரிகளின் பருவக்கால அறுவடையுடன் தொடர்புடைய, வட அமெரிக்காவில் உருவான ஒரு பாரம்பரிய பெயராகும்.
வெறும் கண்ணால், அளவுகளில் உள்ள வித்தியாசத்தைக் கவனிப்பது கடினம் என்றாலும், பூமியிலிருந்து நிலவின் மாறும் தூரம் நமது வானில் அதன் தோற்றத்தை எவ்வாறு நுட்பமாகப் பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஸ்ட்ராபெரி சிறுநிலவு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
வானில் இந்த மாதத்திற்கான நிகழ்வுகள் இவற்றையே. பிரபஞ்சத்தைப் பற்றி மேலும் ஆராய நாம் விரைவில் மீண்டும் சந்திப்போம். அதுவரை, தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருங்கள்!
வணக்கம்!
மேற்கோள்கள்
- https://www.skyatnightmagazine.com/news/venus-jupiter-conjunction-9-june-2026
- https://www.space.com/stargazing/dont-miss-jupiter-and-venus-meet-in-a-dazzling-conjunction-on-june-9-heres-where-and-when-to-look
- https://science.nasa.gov/moon/supermoons/
- https://starwalk.space/en/news/what-is-planet-parade
- https://www.usatoday.com/story/news/nation/2026/06/11/planet-parade-june-2026-when-where/90503501007/
- https://earthsky.org/astronomy-essentials/everything-you-need-to-know-june-solstice
- https://science.nasa.gov/solar-system/skywatching/night-sky-network/tropical-solstice-shadows
- https://www.forbes.com/sites/jamiecartereurope/2026/05/26/full-moon-june-2026-when-to-see-the-strawberry-micromoon-rise/
- https://earthsky.org/tonight/june-full-moon